Showing posts with label அண்ணா. Show all posts
Showing posts with label அண்ணா. Show all posts

Monday, January 25, 2010

ஏன் நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்....

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம். 
 
(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

Saturday, December 12, 2009

இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள்..


கேவலமான பழக்கங்களையும், அர்த்தமற்ற திருவிழக்களையும், பொருத்தமற்ற சடங்குகளையும் விட்டொழித்தால்தான், நாம் உண்மையிலேயே முன்னேறமுடியும். ஆகவேதான் சீர்திருத்த திருமணங்கள் நடப்பதின் மூலம் அறிவுப்பணி நன்கு வேரூன்றி நிலைத்துப் பரவ வழியிருக்கிறதென்று குறிப்பிடுகிறோம். சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவி கிடக்கும் மூடக் கொள்கைகளை தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே! . . . .

இந்தத் திருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா? ஒரு திருவாசகமாவது பாடக் கூடாதா? என்று சிலர் கேட்டதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இப்படிப்பட்ட திருமணங்களிலே அப்படிப்பட்ட பாடல்களைப் பாடத்தான் மாட்டோம்; பாடவும் கூடாது என்பதை நண்பர்களுக்குத் தெரிவித்துவிடுகிறேன். அந்தக் காலத்தில் ஊசி முனையில் நின்றும் ஒற்றைக் காலில் நின்றும் பற்பல விதமாக அகோரத் தவம் செய்த முனிவர்கள் அனைவரும் ஆண்டவனைப் பார்த்து எதைக் கேட்டார்கள்? மற்ற ஆழ்வார்களும் சரி, நாயன்மார்களும் சரி கடவுளிடம் எதைக் கோரினார்கள்.

மக்கள் வாழவேண்டும், உலகம் உருப்படவேண்டும், வறுமை ஒழியவேண்டும், உலகத்தில் உண்மை தழைக்கவேண்டும் என எந்த முனிவராவது எந்த பக்தனாவது, எந்த நாயன்மாராவது கேட்டிருக்கிறார்களா? இல்லையே! பொது நன்மைக்காகக் கடவுளை வரம்கேட்ட பக்தர்களை யாராவது காட்ட முடியுமா? ஒருவரும் கிடைக்கமாட்டார்கள்.

வைகுந்த பதவியும், சிவலோக வாசத்தையும் தங்களுக்காகக் கேட்ட அந்த முனிவர்களையும் அவர்கள் பாடிய பாடல்களையும், இந்தத் திருமணத்தில் அழைப்பதும், பாடுவதும் பொருத்தமற்றது.

இராமர் காலத்தில் இரயில் கிடையாது, ஆகவே ரயில் கூடாது என்று இந்த நாளில் தள்ளிவிட முடியுமா? அல்லது இராமரே ஏறாத ரயிலில் நாம் ஏறுவதா? என்று ரயிலில் ஏறாமல் எத்தனை இராமபக்தர்கள் இருக்கிறார்கள், இருக்க முடியும்! இராமர் காலத்தில் இல்லாத இரயிலில் ஏறித்தானே இராமேசுவரம் போகிறார்கள். அதைப் போலவே அரிச்சந்திரன் காலத்தில் ஆகாய பிமானம் இல்லையென்று ஆகாய விமானம் ஏறாமலா இருக்கிறார்கள். தர்மராசா காலத்தில் தபால்கார்டு இல்லை, தந்தி கிடையாது என்றா தள்ளிவிடுகிறார்கள், கிடையாதே!

எனவே அந்தக் காலம், அந்தக்காலம் என்று பேசுவதும் அந்தக்காலப் பழக்கங்கள் என்று கூறி அவைகளை அப்படியே பின்பற்றவேண்டும் என்று பிடிவாதம் செய்வதும், பொருத்தமற்றவைகள் என்பது நன்கு விளங்குகிறது.

எந்தக் காலத்துப் பழக்கமானாலும் சரி, அது இந்தக் காலத்துக்குப் பொருந்துகிறதா? வாழ்க்கைக்குத் தோயானதுதானா? அறிவுக்கு ஏற்றதா? என்றுதான் நாம் பார்த்துப பின்பற்றவேண்டுமே தவிர, அந்தக் காலப்பழக்கம் என்பதற்காகவும் கண்ணை மூடிக் கொண்டு எதையும் அர்த்தமற்றும் பொருத்தமில்லாமலும் பின்பற்றக் கூடாது.

(அறிஞர் அண்ணா - சுயமரியாதைத் திருமணம் ஏன்?)